Sunday, December 16, 2012

தேடிக்கொண்டே இருப்போம்

ல்லூரிகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ, பயிற்சி வகுப்புகளுக்கோ செல்கிறபோது
அடிக்கடி இந்தக் கேள்வியைக் கேட்பது உண்டு. ரொம்ப எளிதானதுதான். உலகிலேயே அதிகமான மக்கள்தொகைகொண்ட நாடு எது? - எல்லாரும் கோரஸாகச் சொல்வார்கள் சீனா என்று.
அடுத்த கேள்வி - உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள்தொகைகொண்ட தேசம் எது? - உடனே பதில் வரும் 'இந்தியா'.
மூன்றாவது கேள்வி - இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகைகொண்ட நாடு எது? இப்போது பல்வேறு விதமான பதில்கள்.
ரஷ்யா, பிரேசில், பாகிஸ்தான், ஜெர்மனி, இந்தோனேஷியா, அமெரிக்கா. ஆளாளுக்கு ஒரு பதில் சொல்வார்கள்.
நீங்களும் வேண்டுமானால் எங்காவது கேட்டுப்பாருங்கள். 10 பேர் இருக்கும் இடத்தில் அநேகமாக ஒருவரோ, இருவரோதான் சரியாகப் பதில் சொல்வார்கள். 'அமெரிக்கா' என்று பதில் சொல்ல முடியாத அளவுக்கு இது கடினமான கேள்வி ஒன்றும் இல்லை. ஆனாலும், அந்தக் கேள்விக்கான பதிலை நாம் தேடுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கேள்வியையே எழுப்புவது இல்லை.
உலகிலேயே அதிக மக்கள் சீனாவில் இருக்கிறார்கள். அடுத்தது நாம் இருக்கிறோம். அப்புறம் என்ன போதும்... போதும் இதற்கு மேல் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று இருந்துவிடுகிறோம். இந்த விஷயம்தான் என்றில்லை, எந்த ஒரு தகவலும் நமக்கென்று எல்லைக் கோடு. அந்தக் கோட்டைத் தாண்டுவதே இல்லை.

அறிதலிலும் தேடலிலும் அளவுகோல் எதற்கு? தெரிந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் ஒரு தொடர் பயணம். நான், நீங்கள் என நம்மில் பலரும் இந்தப் பயணத்தில் நம்மால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ, அதில் பாதி வேகத்தில்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம். 'இது போதும்' என்று மனசுக்குள் எங்கேயோ மணி அடித்துவிடுகிறது.
என் செல்போனில் ஒரு பிரச்னை. எனக்குத் தெரிந்த செல்போன் விற்கும் கடை ஒன்றுக்குப் போனேன். இதைச் சரிசெய்ய சர்வீஸ் சென்டருக்குத்தான் போக வேண்டும் என்றார், அந்தக் கடையில் இருந்த நண்பர். அது வெகுதொலைவில் இருந்ததால், அருகில் எங்கேயாவது இதைச் சரிசெய்ய முடியுமா என்று கேட்டேன். இங்கே பக்கத்தில் போன் ரிப்பேர் பண்ணும் கடை எதுவும் இல்லை என்றார்.
என்ன செய்வது என்று தெரியாமல் கடையில் இருந்து வெளியே வந்து, வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நண்பரின் கடையில் இருந்து சில கடைகள் தள்ளி போனைப் பழுதுபார்த்துத் தருகிற கடை இருந்தது. உடனே, நண்பருக்கு போன் செய்து "என்னங்க, பழுதுபார்க்கும் கடை இந்தப் பகுதியிலேயே இல்லை என்றீர்கள். இங்கே, பக்கத்திலேயே ஒரு கடை இருக்கிறதே" என்று கேட்டேன்.
அவரும் ஆச்சர்யமாக அப்படியா என்றார். ஸாரிங்க, நான் கவனித்ததில்லை என்று விளக்கம் சொன்னார். இத்தனைக்கும் அவர் தினமும் பயணிக்கிற பகுதி அது. 'என் வேலை போன் விற்பது. அவ்வளவுதான்' என்கிற எண்ணமே அது தொடர்பான இன்ன பிற விஷயங்களைத் தேடுகிற தாகத்தைத் தடை செய்துவைத்துஇருக்கிறது. என் துறையோடு தொடர்புடைய ஏனைய தகவல்களைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டியதும், புரிந்துகொள்ள வேண்டியதும் கூடுதல் வேலை என்று நினைப்பதால்தான் அந்த ஆர்வம் இருப்பது இல்லை.

இந்த உலகத்தில் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்வது சாத்தியம் இல்லாமல் போகலாம். குறைந்தபட்சம் நாம் இருக்கிற அல்லது நம்மை ஈர்க்கிற விஷயத்தோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் தேடுவதுதான் நம்மை உயரத்துக்குக் கொண்டுபோகிறது.
அந்தத் தேடல்தான் நமக்குப் பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் உங்களைத் தனிச் சிறப்பு பெற்ற மனிதராக அடையாளம் காட்டுகிறது. வாய்ப்புகளை உங்கள் வாசலில் வந்து கொட்டுகிறது. இவை எல்லாவற்றையும் விட, ஆத்ம திருப்தியைக் கொண்டுவந்து சேர்க்கிறது.
நான் பணி செய்யும் ஊடகத் துறையிலும் அப்படியான மனிதர்களைப் பார்த்து நான் வியந்தது உண்டு. எனது நண்பர் ஒருவர், ஒரு படைப்பு தொடர்பான அனைத்தையும் தெரிந்துவைத்திருப்பார். ஒரு நிகழ்ச்சிக்கான களத்தை உருவாக்குவதில் தொடங்கி, தொழில்நுட்பரீதியாக அதைச் செம்மைப்படுத்துவது வரை அத்தனையும் அவருக்கு அத்துப்படி.
அவரைப் பார்க்கிறபோது ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கும். அவர் சொல்கிற விஷயத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். இங்கு கவனிக்கத்தக்க மாற்றங்களைச் செய்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு முறையும் தன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடியவர்கள்தான். அப்படி ஓடுவதற்கான ஆர்வம் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வதன் மூலமே கிடைக்கிறது. புதுப்பித்தல் என்பது 'தேடல்' மூலமே நடக்கிறது.
இந்தத் தேடல்தான் நம்மை முழுமையான மனிதன் ஆக்குகிறது. முழுமையான மனிதன் பல புதிய படைப்புகளை உலகுக்கு முன்வைக்கிறான். பலருக்கும் முன்னுதாரணமாக நிற்கிறான். நாம் நேசிக்கிற, பழிக்கிற மனிதர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் துறையில் பாண்டித்யம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.
என் வேலை கேஷியர். எனக்குப் பணம் எண்ணத்தான் தெரியும் என்று சொல்லிக்கொண்டு இருந்தால், உங்களைவிட வேகமாக பணம் எண்ணத் தெரிந்தவர் வந்தால் உங்கள் இடம் பறி போகும். நீங்கள் வங்கியில் இருந்தால் வங்கிச் சேவைகள், பணிகள் குறித்த தகவல்கள் உங்கள் விரல் நுனியில் இருக்கட்டும்.
தொடர்புத் தகவல்களைத் தேடுவது நமது பார்வையை விசாலமாக்குகிறது. இதில் புதிதாக என்ன செய்யலாம் என்று தூண்டுகிறது. போதும்... போதும்... என் வேலை எனக்குத் தெரியும் என்ற 'போதும் மனோபாவம்' நமது அறிவின் வேகத்தையும் ஆற்றலையும் முடக்கிப் போடுகிறது.
தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தொழிலதிபர் எனது நண்பர். போன வாரம் அவரைப் பார்க்கச் சென்றபோது ஒரு தகவல் சொன்னார். "ஒருவர் மிகச் சிறந்த மனிதர் ஆவதைத் தடுப்பது அவருடைய மோசமான செய்கைகள் அல்ல; நான் 'சிறந்தது' என்ற இடத்துக்கு வந்துவிட்டேன், அது போதும் என்ற நினைப்புதான்."
எட்டாவது மாடிக்கு ஏறிப் போகிற எல்லா வாய்ப்பும் இருந்தும், மூன்றாவது மாடியின் பால்கனியில் காற்று வாங்கியே காலம் கழித்துவிடுகிறோம். இதில் எட்டாவது மாடி என்பது ஒரு துறையின் உச்சத்தைத் தொடுவதற்கான தகவல்களைத் தெரிந்துகொள்வது. மூன்றாவது மாடி என்பது இப்போது செய்துகொண்டு இருக்கும் வேலையோடு நேரடித் தொடர்பில் இருக்கும் விஷயத்தை மட்டும் தெரிந்துகொண்டு முடங்கிவிடுவது.
கடவுளோ, இயற்கையோ, நம்மைப் படைத்தது எதுவாக இருந்தாலும், நமக்கென்று ஒரு சிறப்புத் தகுதியோடுதான் படைக்கப்பட்டு இருக்கிறோம். அப்படி நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் வாய்ப்பை மரியாதை செய்யத் தொடர்ந்து தேட வேண்டியது முக்கியமாகிறது.
விஜய் டி.வி. வழங்கும் விருதுகளில், செவாலியே சிவாஜி கணேசன் விருது இந்த முறை ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வு நடிகர் திலகத்தின் இல்லத்திலேயே நடந்தது.
அங்கு அவரிடம் சில கேள்விகள் கேட்கிற வாய்ப்பும் இருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, நடிகர் திலகம் இல்லத்தில் ஓர் அறையில் இருந்த ரஜினிகாந்த் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். 15 நிமிடங்கள் என்னோடு பேசினார். எந்த அலங்காரங்களும் இல்லாத இயல்பான பெருந்தன்மை அதில் இருந்தது.
"நீங்க சிவாஜி சார் பற்றிப் பேசியவிதமும் உங்க மொழி நடையும் எனக்கு பிரமிப்பா இருந்துச்சு. ஆண்டவன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு விஷயத்தைக் கொடுத்திருக்கார்... உங்ககிட்ட ஒரு விஷயம் தந்திருக்கார்... நீங்க அதுக்கு விசுவாசமா இருக்கணும். இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு நீங்க பேசினதைக் கேட்டாலும் எனக்குப் பிரமிப்பா இருக்கணும். அதுக்கு ஏதாச்சும் தேடிக்கிட்டே இருங்க" என்றார்.
இயற்கையும் கடவுளும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றைத் தந்திருக்கிறார். அதை வைத்துக்கொண்டு முழு மனிதனாக உருவெடுக்க வேண்டியதுதான் நமது வேலை.
என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று... ரஜினி அவர்கள் என்னை அழைத்துப் பேசியது. நாம் யாருமே மறந்துவிடக் கூடாத ஒரு விஷயம்... அவர் சொன்னது.
'தேடிக்கொண்டே இருப்போம், திசைகள் எல்லாம்!'

2 comments:

  1. It's amazing to pay a quick visit this website and reading the views of all mates about this article, while I am also eager of getting knowledge.
    Also see my web page: africanmangoplusdirect.com

    ReplyDelete
  2. தேடல் மனிதகுலத்திற்கு அவசியமான பண்பு..!

    ReplyDelete